நாமக்கல் : ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி…

இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (18),  தனியார்
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடித்து விட்டு
சிங்களகோம்பையில் இருந்து  தாய் கவிதாவுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கொக்கு பாறை ஓடையை கடந்து செல்கையில், தண்ணீர் அதிகளவில்
சென்றதால் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், தண்ணீரில் இறங்கி நடந்து
சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் கவிதா தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்த மக்கள் அவரை மீட்டனர். ஆனால் ஜீவிதா ஓடை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், எருமைப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள், ஓடையில் இழுத்து செல்லப்பட்ட ஜீவிதாவை தீவிரமாக தேடி வந்தனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. மேலும் சம்பவ இடத்திற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று பார்வையிட்டார்.

12 மணி நேரமாக தேடியும் கல்லூரி மாணவி கிடைக்காததால் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று காலை கொக்கு பாறை ஓடை பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களும் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.