புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்தால் அனைத்து புற்று நோய்களும் குணமாகிவிடாது என்று டெல்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரங்கா ராவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள MSKCC என்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் புற்றுநோய்க்கான தனது ஆய்வு முடிவை வெளியிட்டது. அதில், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு தங்கள் மையத்தில் அளிக்கப்பட்ட Dostarlimab என்ற மருந்து சிகிச்சை காரணமாக அவர்கள் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த புதிய மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அருகே குர்கானில் உள்ள பராஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான ரங்கா ராவ், இந்த மருந்து குறித்த ஆய்வு முடிவால், அனைத்து வகையான புற்று நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல்வேறு வகையான புற்றுநோய்கள் இருப்பதையும், அவை பல படிநிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதையும் நாம் மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ள அவர், எனவே, அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என கூறியுள்ளார். அதேநேரத்தில், நியூயார்க் மருத்துவமனையின் ஆய்வு முடிவு உற்சாகம் அளிக்கக் கூடியது என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், Dostarlimab மருந்தை இந்திய நோயாளிகளுக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்த மருந்து ஏழை நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் உஜாலா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சச்சின் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி வரலாற்றில் இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பு இதுவே முதல் முறை என தெரிவித்துள்ள சச்சின் பஜாஜ், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் அவசியமின்மையை இந்த மருந்து தெளிவுபடுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், Dostarlimab மருந்தை பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு மிகப் பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை அனைவருமே வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









