முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

திமுகவில் பறிபோகும் முன்னாள் அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவி?


மா.நிருபன் சக்கரவர்த்தி

கட்டுரையாளர்

திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் அறிவிப்பை நேற்று அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்டங்களில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதனால் தற்போது பதவியில் இருக்கும் நிறைய பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பதவி மீண்டும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சியர் பதவிக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிப்பதில் திமுகவில் எப்போதும் கடும் போட்டி நிலவுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, திமுக நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாநகர், புறநகர் என பிரித்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், பின்னர் நிர்வாக காரணமாக நான்காக அதிகரிக்கப்பட்டது. மதுரை மாநகர் தெற்கு மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம், மாநகர் வடக்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு என 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக கோ.தளபதியும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக மு.மணிமாறனும், வடக்கு மாநகர் மாவட்ட செயலாளராக பொன்.முத்துராமலிங்கமும், வடக்கு புறநகர் மாவட்ட செயலாளராக பி.மூர்த்தியும் உள்ளனர்.

தற்போது திமுக வெளியிட்ட அறிவிப்பில், மாநகரை ஒன்றாக இணைத்து மதுரை மாநகர், மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு என மூன்றாக பிரித்துள்ளனர். மதுரை மாநகர் (மதுரை வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு) உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல மதுரை வடக்கு மாவட்டத்தில் (சோழவந்தான், கிழக்கு, மேலூர்) உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளும், தெற்கு மாவட்டத்தில் (உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம்) உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

யார் யார் ரேசில்?

மதுரை மாநகரை பொறுத்தவரை தற்போது மாவட்ட செயலாளராகவும், எம்.எல்.ஏவாகவும் உள்ள கோ.தளபதிக்கு தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவர் நீண்ட கால திமுக உறுப்பினர். மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு சுப மற்றும் துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி சென்று வரும் இவர், மதுரை மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர். மு.க.அழகிரியிடம் இருந்து முதன்முதலாக வெளியேறி மு.க.ஸ்டாலின் பக்கம் சென்றவர்.

அதுபோக அமைச்சர் லிஸ்ட்டிலும் கோ.தளபதி இருந்தார். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வருகையால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி என்பது உறுதியாகி இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரை தெற்கு :

தற்போது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன். 2021ல் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில், அப்போதைய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். தற்போது தலைமைக்கு நேரடி தொடர்பில் உள்ளதால், மீண்டும் அவர் தெற்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போதைய அமைச்சர் மூர்த்திக்கும், மணிமாறனுக்கும் கட்சியில் மனகசப்புக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை வடக்கு:

வணிகவரித்துறை அமைச்சரும் மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ள பி.மூர்த்திக்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மூர்த்தியின் மகன் திருமண விழாவில் பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “கீர்த்தி பெரிதா, மூர்த்தி பெரியதா என்று என்னைக் கேட்டால் மூர்த்திதான் பெரியது” என பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமாக இருக்கும் மூர்த்தியும் நீண்ட கால திமுக உறுப்பினர். தற்போது மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

பொன்.முத்துராமலிங்கம்:

திமுக நீண்ட கால உறுப்பினர், ஒருகிணைந்த மதுரை மாவட்ட செயலாளராக வலம் வந்தவர். 1980ல் எம்.ஜி.ஆரை எதிர்த்து மதுரை மேற்கு தொகுதியில் களம் கண்டவர். ஆட்சியை இழந்த இந்திராகாந்தி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தபோது மதுரை விமானநிலையத்தில் திமுக நடத்திய முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. இந்திராகாந்தியை கொல்ல முயற்சி செய்ததாக கூறி காவேரி மணியம், வைகோவுடன் சேர்ந்து நீண்டகாலம் சிறையில் இருந்தவர் பொன் முத்துராமலிங்கம்.

அதிமுக ஆரம்பிக்கப்பட்டு, அக்கட்சி தேர்தலை சந்தித்த போது திண்டுக்கல்லில் மாயத்தேவரை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டவர் பொன்.முத்துராமலிங்கம். 1984 மற்றும் 89-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் செயல்பட்டவர். 2021 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மதுரை மேயர் தேர்தலில் தனது மருமகளுக்கு சீட் கேட்டிருந்தார்.

ஆனால் பிடிஆர் ஆதரவாளரான பொன்.வசந்த் மனைவி இந்திராணிக்கு வழங்கப்பட்டது. தற்போது மாநகர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள பொன்.முத்துராமலிங்கத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்குவது சந்தேகமே. ஏனென்றால் நான்காக இருந்த மாவட்டம் தற்போது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுகவில் மேல்மட்ட பொறுப்புகள் ஏதேனும் வழங்கலாம் என கட்சிக்குள் பேசப்பட்டு வருகிறது.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சந்திரமுகி – 2ல் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன ?

Web Editor

தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

Halley Karthik

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

Nandhakumar