முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11,32,95,755 சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரரான கிருஷ்ணமூர்த்தி மேலும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.







