காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “இந்தியாவில் தேர்தல் முடிவுகள் திருடப்படுகிறது என குய்ற்றம்சாட்டினார். ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி காலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை என்பது வெளிப்படவில்லை, வடகொரியாவில் அரசுக்கு எதிரான மனநிலை என்ற பேச்சே கிடையாது.
எங்கெங்கெல்லாம் ஜனநாயகம் இல்லையோ அங்கெல்லாம் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை என்பது வெளிப்படாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரது வாக்குரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் வாக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகள் என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்கள் யார் என பட்டியலிட்டவர், அதானி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டார். இவர்களுடைய சிப்பாய்கள் என சொல்லி பிரபல ஊடகங்களை சேர்ந்த செய்தி ஆசிரியர்கள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற உறுப்பினர் கங்கன ராணாவத், தர்மேந்தர் பிரதான் உள்ளிட்டோரது புகைப்படங்களையும் வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே ஞானேஸ்வர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்கு திருட்டு என்பதிலிருந்து பொதுமக்களை திருட வேண்டும் என்ற இடத்திற்கு பாஜக வந்து சேர்ந்திருக்கிறது. சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் அனைத்து சட்டவிரோதமான செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்தியாவில் நடத்தப்பட்டு வெளிவந்த தேர்தல் முடிவுகள் அனைத்துமே பா.ஜ.க.வின் வசதிக்கேற்ப வளைத்து நெளித்து உருவாக்கப்பட்டது.
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது. எனவே இப்படி முறைகேடாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் சட்டவிரோதமானது எனவே அவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும். எஸ் ஐ ஆர் நடவடிக்கைகள் முறைகேடாக நடைபெறுகிறது என ஏராளமான ஆதாரங்களை கொடுத்த போதும் அதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை.
நான் எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் முன் வைத்துக் கொண்டே இருந்தேன் அதைத்தான் தற்பொழுது இரண்டு தேர்தல் ஆணையர்கள் வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள். நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களுமே முறைகேடாகவே நடத்தப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தற்பொழுது நாம் அனுபவிப்பது தான் மிகவும் மோசமான காலகட்டம். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையமே தேர்தலை முறைகேடாக நடத்தி இருக்கிறது. மக்களாட்சியை காப்பாற்ற வேண்டிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அத்தனை முறைகேடுகளையும் செய்திருக்கிறார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் தான் நடைபெற்றுள்ள பெரிய முறைகேடுகளுக்கு மூல காரணம் அவர்கள் இருவரும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அழித்த இவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




