தொடர்ந்து காய்கறிகளின் விலை ஏற்றம் இருந்தும் தற்போது வரை ஹோட்டல்களில் விலை ஏற்றம் செய்யப்படாமல் நஷ்டத்திற்கு விற்பனை செய்வதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தக்காளி, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் முதல் உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள், உணவகம் நடத்துபவர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
விலைவாசி உயர்வு தொடர்பாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
” உப்பை தவிர தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் மட்டுமின்றி அனைத்து விதமான மளிகை பொருள்களும் தொடர்ந்து தங்கம் விலை போல் அதிகரித்து வருகிறது. கோல்ட் ஸ்டோரேஜ் (Cold Storage ) முறை இங்கு பரவலாக இல்லை, அதனால் பல இடங்களில் விளைவிக்கும் காய்கறிகள் வீணாகிறது. அது முறையாக இருந்தால் இந்த விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பொருளும் விலை உயர்கிறது. மத்திய மாநில
அரசுகள் அந்தந்த பகுதி விவசாயிகளை அழைத்து பேசி எப்படி இதை பாதுகாக்கலாம்
என்று பேசலாம். இந்த விலை ஏற்றத்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் நஷ்டத்தில் தான் இந்த மாதம் கடை நடத்தி வருகிறோம். மட்டன், சிக்கனை விட காய்கறிகள் விலை அதிகமாக உள்ளது.
காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் விலை ஏறுவது போல நாங்கள் ஒவ்வொரு நாளும் உணவின் விலையை ஏற்ற முடியாது. மத்திய மாநில அரசுகள் இணைந்து இதனை தடுக்க வேண்டும். கேஸ் விலையும் அதிகமாக உள்ளது. மின்சார கட்டணம் காலை மாலை என குறிப்பிட்ட நேரத்தில் விலையை மாற்றி இருப்பது சரி அல்ல, ஒரு பொருளுக்கு வேறுபட்ட விலையை விதிப்பது நியாமல்ல.
சீரான மின்சாரத்தை சரியான விலைக்கு கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரும் நிறுவனங்களுக்கு இலவசமாக மின்சாரத்தை கொடுக்கிறீர்கள், ஆனால் உள்நாட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இப்படி செய்தால் அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பது கேள்விக்குறியாகிறது.
விலைவாசி உயர்வால் பல சிறு வியாபாரிகள் தொழிலை விட்டு சென்றுள்ளனர். இந்த விலை ஏற்ற நிலை தொடர்ந்தால் எங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். விலைவாசி உயர்வு தற்காலிகமானது தான் என்ற வகையில் ஹோட்டல்களில் இந்த மாதம் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று விலையை ஏற்றம் செய்யாமல் அதே விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
ஆனால் காய்கறிகளின் விலை ஏற்றம், கேஸ் விலை ஏற்றம், மின்சார கட்டணம்
உள்ளிட்டவை தொடர்ந்தால் விலை ஏற்றம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். விலைவாசி உயர்வுக்கு காரணமே அரசாங்கம் செய்யும் தவறுகள் தான் என்று தெரிவித்தார்.







