சகோதரர் ராணுவத்தில் உயிரிழந்தது பெருமையாக இருக்கிறது, என்னை இராணுவத்திற்கு அழைத்தாலும் வர தயார் என்று உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனியின் சகோதரர் ராமர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஜம்மூ காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது, ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர்.
அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் தடுத்ததையடுத்து திடீரென ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து ராணுவப் படையினரும் அதற்கு பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், அவரது சகோரர் ராமர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “சகோதரர் ராணுவத்தில் உயிரிழந்தது பெருமையாக இருக்கிறது, என்னை இராணுவத்திற்கு அழைத்தாலும் வரத் தயார்” என்றார்.
முதலமைச்சர் நிதியுதவி
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று அதிகாலை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.
வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.








