100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், 52 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கி இந்தியாவில் அதிகம் உயர் கல்வி பெரும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டியவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். 2021-ல் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது என்றும், திமுகவின் 505 பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கூறியவர்கள், தற்போது வழங்கியுள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள அரிசியை மாடு கூட சாப்பிடவில்லை என்றும் ஓ. பன்னீர்செல்வம் சாடினார்.
அதேபோல, சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைத்த 9 மாதங்களும் தமிழ்நாட்டின் இருண்ட காலமாக இருந்தாகவும், மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் சாடினார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என விமர்சித்த அவர், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக விளங்கும் தமிழ்நாடு காவல்துறை, ஏவல் துறையாக மாறக்கூடாது எனக்கூறிய அவர், திமுகவின் கைப்பாவையாக காவல்துறை மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








