முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு – யாருக்கு விடியல் ? இலை துளிர்க்குமா? முடங்குமா?


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

விக்டரி என்கிற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான வி என்பதைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலை உலகளாவிய தலைவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இரட்டை விரலைக் காட்டினால் அது இரட்டை இலையைத்தான் குறிக்கும் என்பார்கள். அந்த இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைத்தது. அதன் முக்கியத்துவம் குறித்தும் இன்றைய சொல் தெரிந்து சொல் பகுதியில் பார்க்கலாம்….

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அண்ணா திமுகவை தொடங்கினார். தொடங்கிய சில மாதங்களில் 1973ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. இதில், அதிமுக வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். தேர்தல் ஆணையம் கொடுத்த சுயேச்சைக்கான 16 சின்னங்களில் இரட்டை இலையை தேர்வு செய்தார் மாயத் தேவர். அந்த இடைத் தேர்தலில் அதிமுக அபார வெற்றியைப் பெற்றது. அண்ணா கண்ட சின்னமான உதய சூரியனை கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது அதிமுகவின் இரட்டை இலை. இதைத் தொடர்ந்து, இரட்டை இலை கட்சியின் நிரந்தர சின்னமாகியது. கடந்த 1974ம் ஆண்டு கோவை மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலையில் போட்டியிட்ட அரங்கநாயகம் வெற்றி பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர், அவருக்கு பின்னர் பொதுச் செயலாளராகிய ஜெயலலிதா இருவரும் இரட்டை இலையைக் குறிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இரட்டை விரலை உயர்த்திக் காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். இவர்கள் மட்டுமின்றி அடுத்த கட்ட தலைவர்களும் இதையே தொடர்கின்றனர், கட்சித் தொண்டர்கள் மத்தியில் இரட்டை இலைக்கு தனி மவுசு எப்போதும் உண்டு. இப்போதும் கூட தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை இரட்டை இலையான கட்சி சின்னம் யாரிடம் இருகிறதோ, அவர்களுக்கே தங்கள் ஆதரவு என்றும் சொல்வதை பார்க்க முடிகிறது. தனிசெல்வாக்குள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட இரட்டை இலையில் சின்னத்தில் போட்டியிடுவதையும் காணமுடிகிறது.

எம்.ஜி.ஆர் வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி.ஆர் நிறுத்திய வேட்பாளரையே தோற்கடித்த சின்னமாகவும் இருக்கிறது இரட்டை இலை. கடந்த 1977ம் ஆண்டு தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அய்யாசாமி என்பவருக்கு இரட்டை இலை சின்னத்துக்கான அதிகாரப்பூர்வக் கடிதம் சென்றதால், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அய்யாசாமி அதிமுக வேட்பாளராகவும் பாலகிருஷ்ணன் சுயேச்சை வேட்பாளராகவும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில், ‘’தனது வேட்பாளர் பாலகிருஷ்ணன் தான், அவருக்கு சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள். இங்கு மட்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள்…’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் வேண்டுகோளை விட அவரது இரட்டை இலை சின்னமே மனதில் நின்றதால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமியை வெற்றி பெற வைத்தனர் மக்கள்.

இரட்டை இலைக்கு சோதனைகள்

அந்த இரட்டை இலைக்கும் சோதனைக் காலம் வந்ததுண்டு. எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அதிமுக ஜானகி. அதிமுக ஜெயலலிதா என இரண்டாகியது. 1989ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இருவரும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியதால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. ஜானகி அணி இரட்டைப் புறா, ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். தேர்தலில் தோல்வியே கிட்டியது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. படுதோல்வியில் கற்ற பாடத்தால், இரு அணிகளும் இணைந்ததும் சின்னமும் மீண்டது. இதைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைத்தது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா பிரிவு, அதிமுக ஓபிஎஸ் பிரிவு என்று பிரிந்தனர். அப்போது இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கியது. அதிமுக சசிகலா அணிக்கு தொப்பி, ஒபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால், அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் கட்சிக்குள் காட்சிகள் மாறியது. அப்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவின் மந்திர சின்னமான இரட்டை இலையையும் வீழ்த்தி, சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும் வெற்றி பெற்று தனிக் கவனம் பெற்றார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் அறிவித்து, ஒதுங்கியுள்ளது. இதையடுத்து இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிய நிலையில், ’அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் 2026ல் ஆண்டு வரை நான் தான், அதிமுக சார்பில் நாங்க வேட்பாளரை நிறுத்துவோம்’ என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் – இபிஎஸ் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டும் வருகிறார்கள். ஓரிருவர் வெளிப்படையான ஆதரவும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் வெளிப்படையாக முடிவை சொல்லாத நிலை தொடர்கிறது. அதிமுக சார்பில் இருவரில் ஒருவர் மட்டுமே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், தங்களது இருப்பை காட்ட இருவரும் முரண்டு பிடித்தால், இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.

 

திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், அதிமுக அணியில் குழப்பம் தொடர்கிறது. ஈரோடு கிழக்கு யாருக்கு விடியலைத் தரப்போகிறது… துளிர்க்குமா இலை..? அடுத்தடுத்த நாட்களில் தெரியும்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்; கிடைக்கும் சலுகைகள் என்ன?

G SaravanaKumar

மின் தூக்கி அமைக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

G SaravanaKumar

சபரிமலையில் அரவணப் பிரசாதம் விற்பனைக்கு தடை ; தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்

Web Editor