ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இரண்டு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.
இதனையடைத்து ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொண்டு தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி சென்றனர்.
இதுவரை மொத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– யாழன்







