இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3-வது முறையாக பிரபல இசை விருதுகளில் ஒன்றான கிராமி விருதை வென்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ரிக்கி கேஜின் டிவைன் டைட்ஸ் என்ற ஆல்பம், சிறந்த ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. இதன் மூலம் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதைப் பெற்றுள்ளார்.
‘டிவைன் டைட்ஸ்’ 9 பாடல்களைக் கொண்ட ஆல்பமாகும். இதே ஆல்பத்திற்காக 2022ஆம் ஆண்டு கிராமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2015 ஆம் ஆண்டு விண்டஸ் ஆஃப் சம்சாரா என்ற பாடலுக்காக கிராமி விருதை வென்றார். பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் வரிசையில் ரிக்கி கேஜும் இந்த விருதை வென்றுள்ளார்.
இதுகுறித்து ரிக்கி கேஜ், எங்கள் ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’ கிராமி விருதுக்கு இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டது இசைக்கான முழு மரியாதையாகும். இந்திய இசை அங்கீகரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த விருது என்னை மேலும் ஊக்குவிப்பதோடு, நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இசையைத் தொடர வேண்டும் என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றார்.
-ம.பவித்ரா








