“ஒற்றைத்தலைமை கோஷத்தை முதலில் எழுப்பியவன் நான்; அது இன்று கைகூடப்போகிறது. ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் ஒற்றைத்தலைமையாக தேர்வாக உள்ளார் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் என்றார் தம்பிதுரை.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்க கூடிய நிலையில், கடந்த 23ம்
தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு
உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு
நிலைபாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடிக்கு, 2443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது தலைமை பிரச்சனை தலைதூக்குவது வாடிக்கையானது. அதிமுகவின் தலைமைக்காக ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாகச் சிலரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று வானகரம் அருகே பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பொதுக் குழு தொடர்பாக தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால், பொதுக் குழு கூட்டம் நடைபெறுமா இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.








