அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன், அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட்ட நிலையில், பொதுக்குழு கூட்டம் எந்த தேதியில் நடத்தலாம்? எப்படி நடத்தலாம் என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் மதுரை விமான நிலையம் அருகே பிப்ரவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் டாக்டர் சரவணன் உட்பட 5 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வந்தது.அதே நாளில் பரமக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ முத்தையா இல்ல திருமண விழாவிலும் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் பிப்ரவரி 5 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
– யாழன்