வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாணியம்பாடி கொலை மற்றும் நீட் விவகாரம் குறித்து பேரவையில் பேச முயன்றதாக குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.
நீட் தேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு அளித்த நிலையில், அதற்கு எதிராக யாரும் செயல்பட முடியுமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தெளிவான முடிவெடுத்து சொல்லவில்லை என குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நீட் அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவரின் உயிரிழப்பு க்கு அரசுதான் பொறுப்பு என தெரிவித்தார்.







