எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலமே தமிழகத்தின் பொற்காலம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக செயலாளர் வெங்கடேசனின் தந்தை ராஜபாண்டியன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இராஜபாண்டியன் திருவுருவ படத்தை தமாக தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பாஜக மாநில பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர் என்றும், சிறந்த முதலமைச்சராக இருந்தார் எனவும், அவரின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம் எனவும் புகழாரம் சூட்டினார்.
மேலும் அவரது தலைமையில் அமைந்திருந்த அதிமுக அமைச்சர்கள் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பானவர்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.
பாஜக நிறைய முதல்வர்களை பார்த்துள்ளது. முதலமைச்சர் என்றால் வேறு மாதிரியான பிம்பம் இருந்தது. ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது சாதாரணமாக இருந்தார். எளிமைக்கு சொந்தகாரர் அவர் தான் எனவும் பேசினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராஜபாண்டியன் படத்தைத் திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நெல்லை மாவட்டத்தில் பிறந்தாலும் சென்னையில் வந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
காந்தியடிகளுடன் இளம் பருவத்திலேயே வந்தே மாதரம் என கூறிக்கொண்டு தேசியக்கொடி பிடித்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கதர் ஆடையை அணிந்தவர். அதேபோல் ஏழைப் பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவருக்குமே சமூக சேவையாற்றிய நல்லுள்ளம் புரிந்தவர்.
ராஜபாண்டியன் மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரின் சேவைகள் அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறினார். இவர் அரசியல்வாதிகளில் மாறுபட்ட குணமுடையவர். கப்பல் துறையில் அமைச்சராக நேர்மையாக பணியாற்றியவர் என்றும் பேசினார்.
GK.வாசன் மேடையில் பேசுகையில், ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும். வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதை எடப்பாடி பழனிச்சாமியிடமும் அண்ணாமலை இடமும் கூறுவதாகத் தெரிவித்தார்.








