தரமான கல்வியை வழங்குவதில் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பள்ளி அளவில் நிர்வகிக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளில் புதிய பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஜனநாயக முறைப்படி பள்ளி மேலாண்மைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதன் தொடக்க நிகழ்வாக, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், நம் பள்ளி நம் பெருமை விழிப்புணர்வு வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், லேடி வில்லிங்டன் பள்ளியின், பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லதா என்பவருக்கு சான்றிதழையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த முதலமைச்சர், ஸ்மார்ட் வகுப்பறைகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்மைச் செய்தி: ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிப்பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் என்றும், திருட முடியாத சொத்து, கல்வி என்பதால், இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், குழந்தைகளின் கல்வி என்பது சமுதாயத்தின் அடித்தளம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல் எனக்குறிப்பிட்ட அவர், பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதில் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது எனவும் புகழாரம் சூட்டினார்.
மேலும், அனைத்துவகை வன்முறைகளில் இருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மேலாண்மைக்குழுக்களை வலுப்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவோம் என வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







