அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் வரவுள்ளதால் அவரை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
72 நாட்களுக்கு பிறகு நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் சென்று முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
நாளைய தினம் அதிமுகவின் தலைமை அலுவலக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுகவில் எழுந்த பிரச்சனை, பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு போன்ற சூழல் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்லாமல் இருந்த நிலையில் 72 நாட்களுக்கு பிறகு நாளைய தினம் எடப்பாடி பழனிசாமி அதிமுக
அலுவலகம் செல்கிறார்.
இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு வழங்க உள்ளனர். இதற்காக வாழை மரம், அதிமுக கொடிகள், கூடாரம் அமைக்க சாமியான உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டது, அலுவலகத்திற்கு உள்ளே தூய்மைப்படுத்தும் பணியும்
செய்யப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருவதால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.







