தூத்துக்குடி அருகே பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் கொடுத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி ஆகியோர் சிறுத்தொண்டநல்லூருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு பை கிடந்துள்ளதை பார்த்துள்ளனர்.
அந்தை பையை எடுத்து பார்த்தபோது, அதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே அந்த பையை தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜிலா மேரியிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் அந்த மாணவிகளை அழைத்து சென்று ஏரல் காவல்நிலையத்திற்கு சென்றார்.
பேருந்தில் எடுக்கப்பட்ட நகை பையை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நகை பை திருவழுதிநாடார்விளை சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த மூதாட்டி லட்சுமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்நிலையம் அழைத்து வந்து நகை பையை ஒப்படைத்தனர்.
மேலும் பள்ளி படிக்கும்போதே நல்ல பழக்கங்கள் கொண்ட அந்த மாணவிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து பாராட்டினார். நகையை பார்த்ததும் எடுத்து செல்லாமல் ஆசிரியர்களிடம் கொடுத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளின் செயல், அவர்களது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
-இரா.நம்பிராஜன்








