அதிமுகவினர் தோல்வியடைந்ததாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றால் தோல்வியடைந்ததாக அறிவிக்கக்கோரி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றால் தோல்வியடைந்ததாக அறிவிக்கக்கோரி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து குறிப்பிட்டுள்ளார். கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்த ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதலமைச்சர் துணை போவது வேதனை அளிக்கிறது. அதிமுக அனைத்தையும் சந்திக்க சட்டரீதியாக தயாராக உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தோல்வி அடைந்ததாக அறிவியுங்கள் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “தேர்தல் அதிகாரிகள் ஐனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். யார் குற்றம் புரிந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி நல்லவர் போல நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

கோவைக்கு அவர் நியமிக்கப்பட்ட நாள் முதல் பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. ரவுடிகளை அழைத்து வந்து கோவையில் முகாமிட வைத்து உள்ளார். இதனை கண்டித்துதான் முன்னாள் அமைச்சர் வேலுமணி புகார் அளித்தார். கோவை மாநகராட்சியில் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக தங்கி செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்து கொண்டு திமுக வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. திமுக சட்டம் ஒழுங்கு சீரழிய காரணமாக உள்ளது. நாங்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக முறைப்படி நடந்து கொண்டோம். இன்று தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை சுயமாக செயல்படவில்லை.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.