மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாத பயத்தில் திமுக மீது இபிஎஸ் பழிபோடுகிறார் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்து விட்டதால் அவர் திமுக மீது பழிபோடுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்து விட்டதால் அவர் திமுக மீது பழிபோடுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

நீட் விவகாரத்தில் திமுக ஒரே நிலைப்பாடு தான் எடுத்துள்ளது. நீட் வேண்டாம் என்ற  நிலைப்பாட்டை நாங்கள் ஒருபோதும் மாற்றவில்லை. மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடிக்கு வந்துவிட்டது. அதனால் தான் அவர் திமுக மீது பழி போடுகிறார். அதிமுகவினர் பொதுமக்களை திருப்பரங்குன்றம் போகலாம்.., அழகர் மலைக்கு போகலாம்…என்று ஊர் ஊராக சென்று அழைத்து வருகின்றனர் ஆனால் பொதுமக்கள் செல்ல தயாராக இல்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். திமுகவினர் யாரும் அதிமுக மாநாட்டிற்கு செல்ல போவது கிடையாது, பொதுமக்களும் போகப்போவது கிடையாது.

காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவுபடி கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். முதற்கட்டமாக 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்புப்படி நமக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நிலைபாடு. சேலம் மத்திய சிறையில் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அது போன்று எதுவும் நடக்கவில்லை. சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் உள்ளதால் அதற்கு வாய்ப்பு கிடையாது. பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.