நாங்குநேரியில் மாணவர் மீது சாதிரீதியான தாக்குதல் -அறிக்கை தாக்கல் செய்தார் முதன்மை கல்வி அலுவலர்…

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பன்னிரண்டாம்…

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் சின்னதுரை, சாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இனி இத்தகைய சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளது. இந்நிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு விசாரணை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் அவர் நடத்திய முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுடைய சாதிய வன்மம் பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அதில் கூறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பட்டியலின மாணவர்களுக்கு இழைக்கப்படும் சாதிய கொடுமைகள் மற்றும் அவர்களை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த விசாரணை அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.