எங்கள் பகுதிக்காகவும், எங்கள் மக்களுக்காகவும் தலைமைச் செயலாளர், டிஜிபி பதவிகளை உருவாக்க வேண்டும் என மணிப்பூர் குக்கி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மணிப்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் உள்ளிட்ட குக்கி-சோமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் “திறமையான நிர்வாகத்திற்காக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) போன்ற பதவிகளை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் 5 மலை மாவட்டங்களில் குக்கி மக்களுக்காக தனி நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்று முதன்முதலில் கோரிய எம்எல்ஏக்கள், மாநிலத் தலைநகர் இம்பால் (மெய்தி ஆதிக்கம் செலுத்துகிறது) “மரணப் பள்ளத்தாக்காக மாறியதால், தனி மற்றும் மூத்த நிர்வாகப் பதவிகளைக் கேட்கும் நடவடிக்கை அவசியமானது என்று தெரிவித்துள்ளனர்.“குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் எம்சிஎஸ் (மணிப்பூர் சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் மற்றும் எம்பிஎஸ் (மணிப்பூர் காவல் சேவை) அதிகாரிகள் கூட இம்பால் பள்ளத்தாக்குக்கு மாறிவிட்டால் தங்கள் கடமைகளைச் செய்ய முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.






