அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் பிரசார வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களின் புடை சூழ வந்தார்.
அப்போது, இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பின்வாங்கினர். இதையடுத்து, பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்தார்.
பரபரப்பான இத்தகைய சூழலுக்கு நடுவே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கட்சி நலனுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டதாக கூறி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் அதிமுகவின் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2001 முதல் 2007 வரை இவர் அதிமுகவின் பொருளாளராக இருந்தார். 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, பொதுச் செயலாளராக இருந்த சசிகலா ஓபிஎஸ் இடம் இருந்து பொருளாளர் பதவியை பறித்து, திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்தார்.
இதன்பிறகு, அதே ஆண்டில் ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பிறகு இபிஎஸ் தலைமையில் அதிமுக உருவானது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வரவு செலவை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார்.