கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது செயற்குழு கூட்டமாக மாற்றப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கபட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 -ஆம் தேதி அன்று சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில், நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்ளும் கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா