நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. அப்போது, உரையாற்றிய…

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. அப்போது, உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசு அமைந்த பிறகு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்ததாக தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் தொடர்ந்து நடைப்பெறும் எனவும், அரசு பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, அன்புடைமை போன்ற தத்துவங்களை, இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடத்தை தீர்மானிக்கின்றதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார்.

நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாகுபாடுகளை உருவாக்குகிறது. எனவே, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என இந்த அரசு கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.