அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு இடையில் கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்வுகளும் தாமதமாக மே மாதத்தில் நடத்தப்பட்டன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 9.12 லட்சம் பேரில் 8.21 லட்சம்பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட இளங்கலை படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை http://www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக வரும் 27-ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
வெளியாகி உள்ளதால், 5 நாட்கள் முன்னதாகவே வரும் 22 முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48, பதிவுக்கட்டணமாக ரூ.2 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும், பதிவுக்கட்டணமாக ரூ.2 மட்டும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு http://www.tngasa.in & http://www.tngasa.org என்ற இணையதளங்களை அணுகலாம் என்றும் 044-28260098 , 044-28271911 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.








