குற்றம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் தற்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரசாந்த். 27 வயதான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் – சித்ரா தம்பதியின் 16 வயது மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாகராஜ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் பிரசாந்தும், நாகராஜின் மகளும் திருப்பூரில் கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பிரசாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமனார் நாகராஜைத் தொடர்பு கொண்டு தன் மனைவியின் ஆதார் அட்டையைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று மகளை கடத்திச் சென்றதாக 2018ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பிரசாந்தின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஜெம்புநாதபுரம் உதவி ஆய்வாளர் முகமது ரபீக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். விசாரணையில் பிரசாந்த் திருப்பூரில் இருப்பதை உறுதி செய்த போலீஸார், அங்கு விரைந்து பிரசாந்த்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், உதவி ஆய்வாளர் முகமது ரபீக் வெளியே சென்ற போது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, பிரசாந்த்திடம் விசாரணை நடத்தி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 15 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் காவல் நிலையத்திலேயே குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொள்ள மனைவியை அழைத்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடுமாறு அவரது மனைவி கெஞ்சியும் அவரது பேச்சை கேட்காமல், காவல் நிலையத்தின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதால் தான் மனமுடைந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறி, பிராசந்தின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், முசிறி ஜெம்புநாதபுரம் உதவி ஆய்வாளர் முகமது ரபிக் மீதும் அங்குள்ள காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, மத்திய மண்டல ஐஜி ஜெயராமின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் முகமது ரபீக் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து உறவினர்கள் பிராசாந்தின் உடலை வாங்கிச் சென்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பழகிய மூன்றே நாட்களில் சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு… சமூக வலைதளத்தால் நேர்ந்த அவலம்!

Dhamotharan

கேக் வெட்டுவதில் தகராறு….இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்…!

Saravana

அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

Gayathri Venkatesan

Leave a Reply