சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து இன்று பெங்களூரூவிலிருந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. முன்னதாக சசிகலா பயணித்த காரில் அஇஅதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்ததிற்கு அமைசர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து, காவல்துறையில் புகார் மனுவை அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று சென்னை திரும்பும் சசிகலா, அஇஅதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வந்துக்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அஇஅதிமுக கொடியை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்தை பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டது சசிகலாவுக்கு அஞ்சிதானா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “தினகரன்தான் எங்களைக் கண்டு அஞ்சுகிறார். எங்களுக்கு எந்த பதட்டமும் கிடையாது. உயர் நீதிமன்றம், கட்சியின் சின்னமும், கொடியும் பயன்படுத்த எங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக சசிகலா பயணிக்கும் காரில் இருந்து அஇஅதிமுக கொடியை அகற்றக்கோரி அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். தமிழக – கர்நாடக எல்லையில் தனது காரில் இருந்து இறங்கிய சசிகலா, அஇஅதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ள நிர்வாகிக்கு சொந்தமான வேறொரு காரில் பயணித்தார். அதில், அஇஅதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலாவின் காரில் பொருத்தப்பட்டுள்ள கொடியை அகற்ற போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், நோட்டீஸ் தருவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.” என்று தெரிவித்தார். மேலும்,
காவல்துறை பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறிய தினகரன், காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அஇஅதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிக்கிறார் என்றும் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.