ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாட்களில், 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30 வரை நடத்தப்பட வேண்டும் எனவும், டிசம்பர் 2ல் செய்முறைத் தேர்வுகளையும், டிசம்பர் 13ல் செமஸ்டர் தேர்வுகளையும் துவக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2022 ஜனவரி 19ல் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







