காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காததால் ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து நகராட்சி பொறியாளர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர் தனக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்காமல் பாதி ஊதியத்தையே ஆணையாளர் வழங்கியதாக கூறி, ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை பிற ஊழியர்கள் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
பொறியாளரின் போராட்டம் குறித்து ஆணையாளரிடம் கேட்டபோது, பொறியாளர் கோவிந்தராஜன் கடந்த 19 ஆம் தேதியில் இருந்து பணிக்கு வரவில்லை என்றும், அதற்காக விடுப்பு கடிதம் கொடுக்கவில்லை என்பதால் அவருக்கு பாதி ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் விடுப்பு எடுத்த நாட்கள் பதிவேட்டில் உள்ளதாகவும் தெரிவித்த ஆணையாளர், பொறியாளரின் போராட்டம் குறித்து சென்னை தலைமை நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.






