தமிழக – கேரள மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் சீசன் தொடக்கத்தால், குற்றாலம் பகுதிக்கு பழங்களின் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம்
வருவது மலை சூழ்ந்த அருவிகளும் இதமாக பெய்யும் சாரல் மழையும் தான்.
குறிப்பாக, ஜூன் மாத தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருக்கும். மேலும், சாலையோர கடைகளில் விற்பனை செய்யும் மாங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்த சிப்ஸ் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் விரும்பி உண்பர்.
அந்த வகையில் தமிழக- கேரளா எல்லைப் மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும்
பழங்களான ரம்புட்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவர். இதனால், குற்றால சீசன் தொடங்கும் போது, இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய ரம்புட்டான் பழங்களையும், மங்குஸ்தான் பழங்களையும்,
விற்பனை செய்வதற்காக ஏராளமான வியாபாரிகள் குற்றாலம் பகுதியில் கடைகளை
அமைத்து பழங்களை விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ரம்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களின் சீசன்
தொடங்கியுள்ளது. மேலும், பழங்களின் வரத்து தற்போது குற்றாலம் பகுதிக்கு அதிகரித்து
காணப்பட்டு வருகிறது. இருந்தபோதும், ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் குற்றால
சீசனானது, தற்போது வரை தொடங்காமால் உள்ளது. பழங்களை வாங்குவதற்கு சுற்றுலா
பயணிகள் இல்லாத காரணத்தினால், அதனுடைய விலையானது சற்று குறைந்தே
காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ரூ.200 முதல் ரூ.300 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த
பழங்கள், தற்போது அதிக அளவில் கேரளாவில் இருந்து குற்றாலம் பகுதிக்கு வருகிறது.
இந்த பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு டன் கணக்கிலான பழங்கள் பெங்களூர், சென்னை,
மைசூர் மற்றும் கோவை உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது. பழங்கள் உற்பத்தியானது அமோகமாக இருப்பதால், விவசாயிகளும்
வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கு. பாலமுருகன்







