சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை , சிஐடி காலனி, பெசன்ட் நகர், எம் ஆர் சி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவியின் வங்கி கணக்கிலிருந்து அதிகப்படியான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானக் குழுமத்தின் ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கணக்கு விவரங்கள் குறித்து விளக்கம் அளித்து வருவதாக தெரிகிறது.
அதேபோல், அமைச்சர் கே என் நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் வீட்டிலும், அவருக்கு தொடர்புடைய பல இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. அருண் அந்த கட்டுமான நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள காரணத்தில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணனின் வீடு கோவை, சிங்காநல்லூர் அருகில் உள்ள மசக்காளிபாளையம் டி.வி.எச் ஏ காந்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ளது. இன்று காலை அவரது வீட்டிற்கு
3 கார்களில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.வி.எச் (TVH) நிறுவனம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். மேலும், கோவை மசக்காளிபாளையம் பகுதியில் டிவிஹெச் ஏகாந்தா குடியிருப்பில் உள்ள கே.என்.நேருவின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.








