பழனி வையாபுரி கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வையாபுரி கண்மாய்,பலநூறு ஏக்கர் பரப்பளவை உடைய இக்கண்மாயானது அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களின் ஆதாரமாக விளங்கி வருகிறது,ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பழனி நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களால் குளத்து நீரின் தன்மையானது முற்றிலும் மாசடைந்தும்,ஆக்கிரமிப்புகளால் கண்மாயின் எல்லையானது மிகமிக குறைந்துள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகளின் சார்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக கண்மாயை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.அதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயை சுற்றி வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் குவிந்தனர்.அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அளித்த கோரிக்கை மனுவில்,கண்மாயின் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுத்து.குளத்தை முழுமையாக தூர்வாரி அதிகப்படியான நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துக்கு 15 நாட்களுக்குள் படிவம்-3ன் படி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.
-வேந்தன்