2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று…

2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த 2011 ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையிட்டது.

இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.