நீலகிரி காபி தோட்டத்தில் மழையால் நிரம்பிய குளத்தில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து பகல் நேரங்களில் பெய்யும் மழையால் அப்பகுதியில் மீண்டும் பசுமை திரும்பி வருகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலம் வனப்பகுதியில் அமைந்துள்ள சிங்கார தனியார் காபி தோட்டம் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள குளங்கள் நிரம்பி உள்ளன.
கோடை வெப்பத்தால் தவித்திருந்த யானைகள் மழையால் நிரம்பிய குளத்தில் தங்கள் குட்டிகளுடன் குளத்தில் ஆசைதீர நீர் அருந்தியும், குளித்தும் விளையாடி மகிழ்ந்தன. இந்த காட்சியை காபி தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுமார் 2 மணி நேரம் குளத்தில் விளையாடிய அந்த யானை கூட்டம் குட்டிகளுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.








