மிகவும் பழமை வாய்ந்த புனித நகரமான அயோத்தியை ‘காலநிலை ஸ்மார்ட் சிட்டியாக’ மாற்றுவதற்கான பணியை இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச அரசின் நகர மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்ட நகர வளர்ச்சி திட்டத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்ட விளக்கக்காட்சிகளை முதல்அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை பசுமை நகரமாக மாற்றவும், பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நகரம் மாற்றப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டு உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்றவாறு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உ.பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் ராமர் கோவில் கட்டி முடிப்பதற்குள் அயோத்தி நகரத்தின் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் உ.பி. நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் அடிப்படையில் அயோத்தி நகரை ‘காலநிலை ஸ்மார்ட் சிட்டியாக’ மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.








