சத்தியமங்கலத்தில் பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் யானை – வனத்துறை விளக்கம்!

  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவறான தகவல் வெளியிட்டால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சத்தியமங்கலம்…

 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவறான தகவல் வெளியிட்டால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகத்துக்கு மைசூர் தேசிய நெடுஞ்சாலை பயணிக்கிறது. வனத்தின் மத்தியில் செல்லும் இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி கோயிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

பண்ணாரி வனத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளன. இந்நிலையில் புதுக்குய்யனூர் வனத்தில் இருந்து வந்த ஒற்றையானை சாலையோரம் நடந்து சென்றபோது அதனை வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். அப்போது யானை சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் கழிவை எடுத்து சாப்பிடும் போது வாகன ஓட்டிகள் ”சாப்பிடாதே… அது பிளாஸ்டிக்” என யானைக்கு அட்வைஸ் செய்யும் காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை வாகன ஓட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகளை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்கில் பகிர்ந்து தவறான தகவல் வெளியிட்டால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அண்மையில் கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று யானை ஒன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.