விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்து பேசி வருகிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் 2-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து ஏழை, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் மிகவும் ஏழ்மையாகவும், வறுமையிலும் உள்ள மக்களை கண்டெடுத்து அவர்களை பற்றி தகவல்களை சேகரிக்கவும் நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தாராம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இலவச ஆடு மாடுகளை தனிப்பட்ட திட்டமாகவோ அல்லது விழா மேடைகள் அமைத்து அதன்படி கொடுக்கலாமா என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக இரவு பாட சாலை திட்டம் வருகின்ற ஜூலை 15 காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளான அன்று அறிமுக படுத்த உள்ள நிலையில், இந்த இலவச ஆடு மாடுகள் வழங்கும் திட்டமானது ஓரிரு மாதங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா