“பயிர்கள் சேதமடைகிறது என்பதற்காக யானைகள் வழித்தடங்களை அடைக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற காரணத்திற்காக யானை வழித்தடங்களில் தடைகளை ஏற்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் யானைகள் வழித்தடங்களில் உள்ள தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், யானைக் கூட்டங்களை விரட்டுவதற்காக துப்பாக்கிகள், வெடிபொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வனவிலங்குகளின் வழித்தடத்தில் தடைகள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக யானைக் கூட்டங்கள், நீண்ட தூரம் பயணம் செய்யும் பழக்கமுடையவை, அவ்வாறு அவை பயணம் செய்யும் வழித்தடங்களின் அருகே உள்ள பயிர்கள் அழிக்கப்படுகின்றன என்பதற்காக, அவற்றின் வழித்தடங்களில் எந்த மாநிலமும் தடைகளை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பல்வேறு மாநிலங்கள் வழியாக யானைகள் தடையின்றி கடந்து செல்வதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தாலும், உள்ளூர் காரணிகளால் யானைகளின் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. எனவே, யானை வழித்தடங்கள் குறித்து நாடு தழுவிய புதிய கணக்கெடுப்பை நடத்தி விரிவான அறிக்கையையும், வன விலங்குகளின் நடமாட்டத்திற்கு ஏற்படும் தடைகளைத் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், யானைகளுக்கு எதிராகவும், அதனை விரட்டுவதற்காகவும் துப்பாக்கிகளையோ, வெடி பொருட்களையோ பயன்படுத்துவது அல்லது பிற நடவடிக்கைகள் தொடர்பான நிலைப்பாட்டையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆறு வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.