அனைத்து திருக்கோயில் தலவரலாறுகளும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் தல வரலாறு, தலபுராணம், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்தி, மின்னணு மயமாக்கி, பக்தர்கள் எளிமையாகப் பார்வையிடக் காட்சிப்படுத்தவும், அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்’
திருக்கோயில் தலவரலாறு, தலபுராணம், சிற்றட்டைகள் உள்ள திருக்கோயில்களின் விபரத்தினை நகலினை அனுப்பி வைக்கவும், இதன் விவரங்கள் இல்லாத திருக்கோயில்களுக்குத் தயார் செய்து அதன் விபரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், ஆன்மீக பெரியோர்களால் வெளியிடப்பட்ட அரியவகையான நூல்கள் மற்றும் திருக்கோயில் தொடர்பான நூல்கள், உள்பட அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், துறையின் சார்பில் மாதந்தோறும் திருக்கோயில் திங்களிதழ் என்ற பெயரில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு கோயில் முக்கிய திருவிழாக்கள், கோயில் வரலாறு, கல்வெட்டுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், திருக்கோயில்கள் மூலம் வெளியிடப்பட்ட தலவரலாறு விவரங்கள் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் (ITMS) –ல் பதிவேற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இப்பணிகளுக்காகத் திருக்கோயிலில் பணிபுரியும் புலவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், விரைவில் அனைத்து திருக்கோயில் வரலாறுகளையும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணையதளத்தில் வெளியிடப்படும் தெரிவித்துள்ளார்.








