நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரம் இன்று காலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு புதிய வடிவத்தில் உயிர் கொடுப்பவர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகான் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான டீசர் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
நெஞ்சு வலி காரணமாக நேற்று காவேரி மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உடல்நிலை சீராக உள்ளதால் இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இன்று மாலை நடைபெறும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.









