நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, கோவை, சென்னை மாநகராட்சியில் அதிகளவில் வன்முறைகள் நிகழ்ந்ததாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சிறப்பு அதிகாரி மூலம் தேர்தலை கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை மாநகராட்சியில் பல வாக்குச்சாவடிகளில் பயத்தில் தி.மு.க வினர் கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். அதில் தி.மு.க வேட்பாளரின் கணவர் ஒருவர் போலீசாரை மிரட்டும் வீடியோ இடம்பெற்றுள்ளதாகவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை எனவும், அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி தி.மு.க செயல்பட்டுள்ளது.காவல்துறைக்கு பாதுகாப்பாக ராணுவத்தை அழைக்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது.சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தான் காரணம். மக்கள் அச்சத்தில் வாக்களிக்க வரவில்லை. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை போலீஸ் தடுக்கவில்லை என்றார்.








