தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இந்த நிறுவனம் மட்டுமன்றி இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பில், பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டதால் பங்குச்சந்தையில் புள்ளிகள் பெரும் உச்சத்தைத் தொட்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற குழு அமைத்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளுக்குத் தடைவிதிக்கவும் சில தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.






