டெல்லி மதுபான கொள்கை பண மேசாடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து அவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தியது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து நேற்று இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்ற சூழலில் , திகார் சிறையிலிருக்கும் மணீஷ் சிசோடியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ” டெல்லியின் கல்வி அமைச்சராகப் பணியாற்றியபோது, தேசிய மற்றும் மாநில அளவில் ஆட்சியைப் பிடித்த தலைவர்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யாதது ஏன் என்ற கேள்வி என் மனதில் பலமுறை எழுந்தது. ஆனால் தற்போது சில நாட்களாக சிறையில் இருக்கும் எனக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்து வருகிறது. குழந்தைகளுக்கு சிறந்த தரமான கல்வி வழங்குவதைக் காட்டிலும் அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைப்பது மிகவும் எளிதான காரியம்.
பாஜகவின் பிரச்சனை கல்வி சார்ந்த அரசியலே. அவர்கள் தேசத்தினை உருவாக்க நினைக்கிறார்கள், தலைவர்களை அல்ல. கல்வி சார்ந்த அரசியல் என்பது எளிதான காரியமல்ல. அரசியல் ஆதாயத்துக்கான விஷயமும் கிடையாது. பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் கல்வி குறித்த அனுபவங்கள் மற்றும் சோதனைகளிலிருந்து ஒன்றையொன்று கற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஏன் பாஜக ஆளும் மாநிலங்கள் கூட, தங்களது அரசுப் பள்ளிகள் மோசமாக நிர்வகிக்கப்படுவதால், தொலைக்காட்சியில் கல்வியை விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்படி இருக்க இன்று பாஜக
ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கும் அரசியல் வெற்றி பெறலாம். ஆனால், எதிர்காலம் கல்வி சார்ந்த அரசியலுக்கானதாகும், அதை உணருங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா