யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. பாவலரேறு பெருஞ்சித்திரனார்  1933 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம்…

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  1933 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி  சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் ஊரில் துரைசாமி மற்றும்  குஞ்சம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஆரம்பத்தில் பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் இராஜமாணிக்கம்.  மாணவப் பருவத்தில் தனது தந்தை பெயரில் பாதியும், தனது பெயரில் பாதியும் இணைத்து துரை-மாணிக்கம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தொடக்க கல்வி பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது  நடேசன் மற்றும் தமிழ் மறவர் பொன்னம்பலனார் ஆகியோர் இவருக்கு ஆசிரியராக வாய்ந்ததால் தமிழை அதிக ஈடுபாட்டுடன் கற்றார். பள்ளியில் பயிலும் காலத்திலேயே ”குழந்தை” என்னும் பெயரில் கையெழுத்து ஏடு தொடங்கினார். பின்பு “அருணமணி” என்னும் புனைப் பெயரில் “மலர்க்காடு” என்னும் கையெழுத்து ஏட்டையும் “மல்லிகை”, பூக்காரி” என்னும் பாவியங்களை இயற்றினார்.

சேலம் நகராண்மை கல்லூரியில் படிக்கும்போது தமிழ் அறிஞர் தேவநேய பாவாணரிடம், தமிழ் பயின்று தனது அறிவை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு, பெருஞ்சித்திரனாருக்குக் கிடைத்தது. கல்லூரியில் பயிலும் காலத்தில் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். இந்த ஈடுபாட்டினால் அவர் எழுதிய  “மல்லிகை”, “பூக்காரி” ஆகிய  பாவியங்களை எடுத்துக் கொண்டு பாரதிதாசனைச் சந்தித்தார்.  பாரதி தாசனையே கவரும் அளவுக்கு அவரது பாவியங்கள் சிறப்பாக  இருந்தன.

சேலத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கமலம் என்பவரை பெருஞ்சித்திரனார்,  திருமணம் செய்து கொண்டார். கமலம் என்ற பெயரை பின்பு “தாமரை” என மாற்றினார்.
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் அவரது வாழ்க்கை அமைந்தது. 1959 -ஆம் ஆண்டு கடலூருக்கு பணியிட மாற்றம் கிடைத்தது.

இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் பெருஞ்சித்திரனார்..!

இந்தி எதிர்ப்புக் போராட்டம் தமிழ் நாட்டில் தீயாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு வலுவூட்டும் வகையில் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அமைந்தன. அவரது எழுத்திலும்
பேச்சிலும் இந்தி எதிர்ப்பு குரல் பற்றி எரிய தொடங்கியது. அவரது உரையைக் கேட்போரும் படிப்போரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈர்க்கப்பட்டனர்.

தமது இந்தி எதிர்ப்பு மற்றும் தனித் தமிழ் இயக்கப் பணிகளுக்கு, அரசுப் பணி தடையாக இருப்பதை உணர்ந்தார் அவர் முழுநேரமும் மொழிப் பணியாற்றுவதற்கு முடிவெடுத்தார். எனவே அஞ்சல் துறையில் இருந்து ராஜிநாமா செய்து முழூவீச்சில் தமிழ் மொழிக்காக உழைக்க தொடங்கினார்.

தமிழுக்காக சிறை ..!

அவர் எழுதிய பாடல்களும், ஆற்றிய உரைகளும் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிடுவதாக கூறி அரசு அவரை   வேலூர் சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபோது ”ஐயை” என்னும் தனித் தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.  வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பின் “தமிழ்ச் சிட்டு”  எனும் இதழைத் தொடங்கினார்.  தமிழ் எப்படி வாழாது என்பது தொடர்பாக வெள்ளிடை மலையாக கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

 ‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது:
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! !

தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது !

ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே
இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !

பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது:
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது

அத்துடன்,  என்ன செய்தால் தமிழ் வாழும் என்பதனையும் மிக அற்புதமாக பெருஞ்சித்திரனார் எடுத்துரைத்துள்ளார்..

“தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !

தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !

கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் !

தமிழ் வாழும் அன்றே !”

அறுபருவத் திருக்கூத்து, ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்,  இட்ட சாவம் முட்டியது,  இனம் ஒன்றுபடவேண்டும் என்பது எதற்கு ?, உலகியல் நூறு, எண்சுவை எண்பது, நூறாசிரியம், நெருப்பாற்றில் எதிர் போன்ற நூல்களைப் பெருஞ்சித்திரனார் எழுதியுள்ளார். தமிழுக்கு அரும் தொண்டாற்றியதால் தமிழறிஞர் தேவநேய பாவணரால் “பாவலரேறு” எனும் பட்டத்தை சூட்டினார். பெருஞ்சித்திரனார் 1995ம் வருடம் ஜூன் மாதம் 11ம் தேதி தனது 62வது வயதில் மரணத்தை தழுவினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.