படிப்பு.. படிப்பை பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் தமிழ் திரையுலகம் முதல் மேற்கத்திய மொழிகள் வரை பல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் சில திரைப்படங்களின் வசனங்கள் நமது மனதிலும் நினைவிலும் நீங்காத இடம் பிடித்தவை. மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் ”படிடா பரமா” எனும் மணிவண்ணனின் வசனமும், அசுரன் கிளைமாக்ஸில் “படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து யாரும் எடுத்துக்க முடியாது” எனும் தனுஷின் வசனமும் நமது மனதில் காலத்திற்கும் அழியாத பொன்சுவடுகளாகும்.
நம்மை பல கோணங்கள் மூலமாக படத்திற்கு உள் கொண்டு சென்றுவிட்டு, ” பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்பு மட்டும் தான் மரியாதையை கொடுக்கும்” எனும் வசனம் மூலமாக படத்தின் சாராம்சத்தை நமக்கு உணர்த்துகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்தையும் பழைய நியாபகங்களையும் கொடுத்து கண்கலங்க வைக்கும்.
கதாநாயகியாக வலம் வருகிறார், சம்யுக்தா மேனனுக்கு படத்தில் உரிய முக்கியத்துவம் இல்லை. எந்த இடத்திலும் மெதுவாகவோ, சலித்து போகும் அளவுக்கோ எந்த காட்சிகளும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. 2 ½ மணிநேர காட்சியில் எப்படி எல்லாம் மாணவர்களை படிக்க வைக்கலாம் என போராடும் தனுஷ், எந்த இடத்திலும் நம்பமுடியாத ஹீரோயிசத்தை காட்டாமல் ஒரு சாதாரண வாத்தியாகவே வருகிறார்.
2000த்தின் தொடக்கத்திலிருந்து தற்போதைய காலம்வரை கிராமப்புற மாணவர்களின் கல்வியை எவையெல்லாம் தடுக்கின்றன என்பதையும், பள்ளிகளில் இருந்த சாதிய பாகுபாட்டை தைரியமாக தோலுரித்து காட்டி அந்த சாதிய பாகுபாட்டை எப்படி கலைவது என்பதை அழகாக காட்டியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி. வறுமை, சாதிய பாகுபாடு, கட்டாய திருமணம், பெண்கள் படித்து என்ன செய்யபோகிறார்கள் எனும் கேள்விக்கான பதில் சாட்டையடியாக ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு கூறிய வசனமான “நீங்க என்ன வேண்டுமானாலும் படியுங்கள், எங்க வேண்டுமானாலும் போய் படியுங்கள், அதற்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும், செலவையும் தமிழ்நாடு அரசாங்கம் செய்யும்” எனும் வசனத்தை சமுத்திரகனி சொல்லியிருப்பார்
தனது கடின உழைப்பு ஒரு BATCH மாணவர்களுக்கு பலனளித்ததால் அதையே தனது வாழ்வின் குறிக்கோளாக நினைத்து தனது பயணத்தை தொடர்ந்த வாத்தி தனுஷ் ஒரு வாத்”தீ” யாகவே தெரிகிறார்.
– ஆண்ட்ரூ, நீயூஸ் 7 தமிழ்







