மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்தை விட கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதன் மூலம் மக்களை திசைதிருப்ப திமுக முயற்சி செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.








