சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு
பிரச்னைகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் நடைபெற்ற கொலை சம்பவங்களை கண்டித்து பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாளை நண்பகல் 12.45 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து பட்டியல் ஒன்றை ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திக்க உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







