“எடப்பாடி பழனிசாமி நமது மொழியின் எதிரி” – கனிமொழி விமர்சனம்

பாஜக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக அறிவித்த அதிமுக, தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என கனிமொழி விமர்சனம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி  முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை தொடங்கினர்.

தொடர்ந்து ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பு மூலம் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருமையான முன்னெடுப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

நம் சிறப்பான திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் நாம் சேர்க்க வேண்டும் என பேசிய அவர், நம் எதிர் அணியில் யார் உள்ளனர் என்பதை மனதில் நிறுத்தி நாம் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய கனிமொழி, பாஜக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக அறிவித்த அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என விமர்சனம் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பாஜகவினரையே மிஞ்சும் வகையில் உள்ளதாக பேசிய அவர், இன்னும் சிறிது நாளில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கிறாரா அல்லது பிஜேபியில் இருக்கிறாரா என தெரியாத நிலையில் அவர் திராவிட கொள்கைகள் மறந்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒருவராக உள்ளார் என்றும் அவர் தமிழினத்தின் துரோகி என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். எடப்பாடி நமது மொழியின் எதிரியாகவும் நமது தலைமுறையினரின் எதிரியாகவும் நாம் பார்த்து இந்த தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.