சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று (அக்.25) காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் செஃப் தாமு. 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, 2025 ல் பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல சமையல் கலைஞரும் தொலைக்காட்சி பிரபலமுமான தாமு மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

விசிக நிறுவனத் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார் என்கிற செய்தியறிந்து வேதனையடைந்தேன். சமையல் கலையில் இந்தியாவில் முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றவர். தனிநபர் சமையல் மராத்தானில் நீண்ட நேரம் சமைத்து கின்னஸ் சாதனை செய்தவர் செஃப் தாமு அவர்கள். அவரது இழப்பு சமையல் கலைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! செஃப் தாமுவுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் தாமு மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன். சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தாமுவுக்கு என் புகழ் வணக்கம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சமையல் திறமையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். செஃப் தாமுவை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.